December 4, 2024

எமது தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா…?

உலக நாடுகள் முன்னிலையில் நாடும் நாட்டு மக்களும் பின்னடைவை சந்தித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் யுக்ரேன் மக்களைப் போன்று கைகோர்த்துக் கொண்டு ஒன்றிணைந்து தேசிய சமாதான வேலைத்திட்டம் ஒன்றுக்கு ஒன்று கூடுமாறு நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம். எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. விவசாயம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாடுகளும் அழிவை சந்தித்துள்ளது. அரசு இயந்திரத்தில் பொதுவான நிலைப்பாடு இல்லாமையினால் இவற்றுக்கான முடிவுகளை காண முடியாதுள்ளது. மேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு தரப்புகள் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

எமது நாடு இதுவரை எதிர்கொள்ளாத இத்தகைய அனர்த்த சூழலில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். அதற்கு அரசாங்கம் நட்புக் கரம் நீட்ட தயாராக இருக்க வேண்டும்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வேளை திட்டமொன்றை முன்மொழிந்து உள்ளது. புகழ்பெற்ற அறிஞரான ரொஹான் சமராஜீவ அவர்களின் தலைமையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பில் இந்த முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெறும் முன்னணி அரசியல் உறுப்பினர்கள் பலரும் இந்த பரிந்துரைகள் அடிப்படை கலந்துரையாடலுக்கு உகந்தவை என்று தெரிவித்துள்ளனர். அதேபோன்று மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இது தொடர்பில் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஆர்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் “நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச பொது வேலைத் திட்டம்”” எனும் தலையங்கத்தின் கீழ் இந்த போது உரையாடல் இடம்பெறவுள்ளது. அதன்பின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறும் கருத்துக்களையும் உள்ளடக்கி தேசிய முன்மொழிவாக இதை நாட்டு மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க கருதி உள்ளோம்.
மேலும் நாட்டு மக்கள் முகம் கொடுத்து வரும் ஏனைய நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வளிக்க வேண்டும். மின்சாரத்தை வழங்கும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த மின்சார சபைக்கு முடியும். புகையிரத சேவை மற்றும் பேருந்து சேவைகள் முடங்கிவிட்டால் ஒட்டுமொத்த நாடும் செயலிழந்து போகும்.

இவ்விடயங்கள் தொடர்பில் எமக்கு தெரிவிக்க இருப்பது என்னவென்றால், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஒரு நிலைப்பாட்டிலிருந்து செயற்படாமல் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதன் காரணமாக நிலைமை மேலும் மோசமாக போகின்றது என்பதே. எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி, நிதி அமைச்சர், மத்திய வங்கியின் அதிபர், (PUSL) மற்றும் மின்சார சபை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு வருகின்றது.

மேலும் மின்வெட்டுக்கு தற்போது பயன்படுத்தி வரும் நேர அட்டவணைக்கு பதிலாக குறிப்பிட்ட பிரிவுக்கு மின்வெட்டை அமுல்படுத்தும் நேரத்தை திட்டவட்டமாக சரியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அப்போது மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்வர்.

வயல்களில் அறுவடை நடக்கும் இந்த காலத்தில் டீசல் பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றை நாம் ஊடகத்தின் மூலமாக காணலாம். அவை மனதுக்கு வருத்தமளிக்கின்றது. மேலும் நாட்டில் மருந்து பற்றாக்குறையும் காணப்பட்டு வருகின்றது . இது மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை ஆகும்.

ஜனவரி மாதத்தில் உணவு பொருட்களின் விலை 24% வீதத்தில் அதிகரித்துள்ளது. அதிக அளவில் பணத்தை அச்சிட்டதெ இதற்கு காரணம். அண்மையில் வெளிப்பன்ன பிரதேசத்தில் மூன்று நாட்களாக தனது நான்கு பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத காரணத்தினால், மன உளைச்சலுக்கு ஆளான தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்டதால் அவரது மனைவி வீட்டில் இருந்த இரு கதிரைகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு வழங்கிய சம்பவத்தை ஊடகத்தின்வாயிலாக அறிந்து கொண்டோம்.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இந்த நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது . போசணைக் குறைபாடு அதிகரித்துள்ளது. இவற்றை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டை நடத்திச் செல்வதற்கு தேவையான 80% சதவீதமான பணத்தை வழங்குவது குறைந்த வருமானத்தை பெறும் மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் படைத்தவர்களுக்கு அதிக அளவிலான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இங்கு சமூக அநீதி ஏற்பட்டு இருப்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் தெரிவித்த விடயங்கள் பெரும்பாலான மக்களின் கருத்து என்பதை தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஆகையால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கம் அனைவரது பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு நாட்டை இந்த பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு செயற்படவேண்டும். இவற்றைச் செய்ய வேண்டுமென்றால் மாற்று அரசியல் கருத்து இருப்பவர்களை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்துக்கு வரவழைத்து ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக பழிவாங்கும் செயற்பாடுகளை தவிர்த்துவிட்டு நல்லிணக்கத்துடன் செயற்படவேண்டும். அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லிவிட்டு வழங்கிய வாக்குறுதிகளை பகிரங்க மேடையில் மீறினால் மக்கள் அங்கீகாரம் கிடைக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு 69 லட்சம் வாக்குகள் கிடைத்த போதிலும் 62 லட்சம் வாக்காளர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை என்பது எமக்கு தெரியும். அதன் காரணத்தினால் அரசியலமைப்பு திருத்தங்களின் பொது ஒட்டுமொத்த நாட்டுக்கும் உகந்தவாறு அவற்றை மேற்கொள்ள வேண்டும். அரசியல் தேவைகளுக்காக அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் பொது நாடு வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் என்பதை 20ஆவது திருத்தத்தை முன்மொழியும் போதே அரசாங்கம் உணர்ந்து இருக்க வேண்டும்.

20 ஆவது திருத்தத்தின் கீழ் இலங்கை சுயாதீனமான நாடாக இருக்காது என்பதே சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாடு என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இதன் காரணத்தினால் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். தமது அதிகாரத்தை கருத்தில் கொள்ளாது தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி சிந்தித்து அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கையில் மீண்டும் இருண்ட யுகம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகவே நாம் இதை வலியுறுத்துகின்றோம். முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்புகள் 11 இணைந்து நேற்றைய தினம் முன்மொழிவுகளை சமர்ப்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது. சந்தர்ப்பத்திற்கு அமைய மேற்படி விடயங்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் தேசிய ஒருமைப்பாட்டின் தேவை வலியுறுத்தப்படுகிறது. அதிகாரிகள் தற்போதாவது உண்மையை உணர்ந்து நாட்டுப்பற்றுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *